தனக்கு பிறந்த 7 குழந்தைகளை கொன்ற அமெரிக்க பெண் கைது

அமெரிக்காவின் உடா மாகாணத்தில் வசித்து வரும் ஒருவர் கடந்த சனிக்கிழமையன்று காவல்துறையினருக்குப் போன் செய்து தனது வீட்டின் கார் நிறுத்துமிடத்தை சுத்தம் செய்தபோது குழந்தையின் சடலம் ஒன்று இருந்ததாகக் கூறியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறைஅங்கு அட்டைப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த ஏழு குழந்தைகளின் சடலங்களைக் கைப்பற்றியுள்ளது.

புகார் செய்தவரின் மனைவியான மேகன் ஹுன்ட்ஸ்மன் (39) என்பவருக்கு இந்தக் குழந்தைகள் பிறந்திருக்கக்கூடும் என்று குறிப்பிட்ட காவல்துறை தற்போது தனியாக வசித்து வரும் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளது. ஆனால் விசாரணையின் விபரம் வெளித் தெரிவிக்கப்படவில்லை.

ஹுன்ட்ஸ்மன் தனது கணவருடன் அந்த வீட்டில் வசித்து வந்த காலத்தில் கடந்த 1996-ம் ஆண்டிலிருந்து 2006-ம் வருடம்வரை தனக்குப் பிறந்த குழந்தைகளைக் கொன்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால் அதுகுறித்து அவரது கணவருக்கு ஏதும் தெரியவில்லை என்பது விந்தையாக இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். இந்தக் குழந்தைகளின் சடலங்கள் ஆய்வுக்காக உடா மருத்துவ ஆய்வாளர் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. மேலும் இவர்கள் இருவரின் டிஎன்ஏ மாதிரிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக காவல்துறை தலைவர் கேப்டன் மைக்கேல் ராபர்ட்ஸ் தெரிவித்தார்.

குழந்தைகளின் சடலங்கள் இருந்த வீட்டில்தான் ஹுன்ட்ஸ்மனின் மூன்று பெண்கள் வசித்து வருவதாகக் கூறப்படுகின்றது. அவர்களுக்கு முறையே 20, 18, 13 வயதிருக்கும்  என்று அவர்களின் பக்கத்து வீட்டுக்காரரான ஷரோன் சிப்மன் என்பவர் குறிப்பிட்டார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்