மான் கராத்தே - விமர்சனம்!


துக்காகவா இவ்வளவு அலப்பறைகள் என்ற யோசனை எப்படி வராமல் இருக்கும். எதிர்ப்பார்ப்பை ஏகத்துக்கும் எகிறவிட்டு, ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்திருக்கிறது மான் கராத்தே. அடிக்க வருகிறவர்களிடமிருந்து மான் மாதிரி துள்ளி ஓடி தப்பிப்பது தான் என்று விளக்கம் வேறு. இதைத்தான் ‘ஜெமினி’ படத்திலேயே பார்த்தாச்சே.


பெரிதாக அலசி ஆராய்வதற்கு படத்தில் ஒன்றும் ஸ்பெஷல் இல்லை. சிவகார்த்திகேயன் என்ற ஒருவரை மட்டும் வைத்து படத்தை ஓட்டிவிடலாம் என்று இயக்குனர் நம்பி இருப்பாரோ என்னவோ! யார் நடிச்சாலும், படத்துக்கு கதைன்னு ஒண்ணு வேணுமே! 

படம் தொடங்கிய பத்து நிமிடத்திலேயே கரெக்டாக கணிக்க முடிகிறது, இது ஒரு மொக்கைப் படம் என்று. ஆனால், மரண மொக்கை என்பதை படத்தின் அடுத்தடுத்த காட்சிகள் நிரூபிக்கின்றன.

ரிலாக்ஸ் பண்ண காட்டுக்குப் போகும் ஐ.டி பணியாளர்கள் ஒரு சித்தரை சந்திக்கிறார்கள். அவரிடம் வரம் கேட்க, அவரும் கேட்டதைக் கொடுக்கிறார். அது ஆயுத பூஜைக்கு அடுத்த நாள் வரும் தினத் தந்தி பேப்பர். பேப்பரில் போடப்படுள்ள விஷயங்கள் அடுத்தடுத்து நடந்து வருகிறது. பீட்டர் என்பவர் பாக்ஸிங் போட்டியில் 2கோடி ஜெயிப்பார் என்றும் அதற்கு இவர்கள் உதவியாக இருப்பார்கள் என்றும் அந்த விசேஷ பேப்பரில் போட்டிருக்கிறது.


பேப்பரில் போடப்பட்ட செய்திகள் நடந்துகொண்டே வர, 2கோடிக்கு ஆசைப்பட்டு ஐ.டி பணியாளர்கள் பீட்டரைத் தேடி அலைகிறார்கள். அவர் தான் சிவகார்த்திகேயன். பாக்ஸிங் என்றால் என்னவென்றே தெரியாத பீட்டருக்கு பணத்தை செலவு செய்து பாக்ஸிக் கற்றுகொடுக்கிரார்கள். இதற்கு நடுவில் சிவகார்த்திகேயனின் கடுப்பேத்தும் காமெடி, வந்துபோகும் ஹன்சிகா, அனிருத்தின் பாடல்கள் என சில விஷயங்கள் நடக்க....

பீட்டர் என்று உண்மையாகவே ஒரு பாக்ஸர் இருப்பது தெரியவருகிறது. தன் காதலி ஹன்சிகாவை அடைய, சிவகார்த்திகேயன் பாக்ஸிங் பந்தயத்தில் வென்றாரா? இல்லை மான் கராத்தேவை பயன்படுத்தி ஓடினாரா? என்பது க்ளைமாக்ஸ்! 


நம்ப முடியாத கதையை, நம்பும் விதமாக சொல்வதே இயக்குனரின் திறமை. அது இந்தப்படத்தில் டோட்டல் டாமேஜ். படத்தில் வில்லனிடம் மான் கராத்தேவை பயன் படுத்தி சிவாகார்த்திகேயன் தப்பிவிடுகிறார். ஆனால், தப்பிக்க முடியாமல் நாம் திரையரங்கில் மாட்டிக்கொள்வது கொடுமை. படத்தின் முதல் பாதியில் மொக்கை, இரண்டாவது பாதி அதைவிட மொக்கை! 

ஹன்சிகா கிடைக்க வேண்டுமென்று சிவகார்த்திகேயன் வில்லன் காலில் விழுவதும், வில்லன் ஹன்சிகாவை தரக்குறைவாக பேசுவதும் சம்பந்தமில்லாதது... பல வருடங்கள் வெற்றிக்கு உழைத்துக் கொண்டிருப்பவனை உழைப்பே இல்லாத ஒருவன் எப்படி திடீரென வீழ்த்த முடியும்? காதில் பூவைக்கலாம், ஆனால் இயக்குனர் திருக்குமரன் பூக்கடையையே வைக்கிறார்! 



ஹன்சிகாவா? - அட! கோவத்த கிளப்பாதீங்க பாஸ்...

கதை ஏ.ஆர்.முருகதாஸா? - சும்மா தானே சொல்றீங்க! 

சுகுமாரின் ஒளிப்பதிவு - அது மட்டும் தான் சூப்பர்!

சூரி இருக்காரா? - இருக்காரு... அவரு பங்குக்கு அவரும் நம்மை கொலையா கொல்றாரு...

சிவகார்த்திகேயனின் மிமிக்ரி - அதைத் தான் நாம ‘கலக்க போவது யாரு’ நிகழ்ச்சியில் பார்த்தாச்சே... 

அப்போ படத்தில் ஒன்னுமே இல்லையா - இருந்தாதானே சொல்றதுக்கு! 

மான் கராத்தே - மொக்கை!

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்